தொடருமா சென்னை வெற்றி: டில்லி அணியுடன் மோதல்

பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன. இதில், சென்னை வென்றால், 'பிளே ஆப்' வாய்ப்பு அதிகரிக்கும்.

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் 'நான்கு முறை சாம்பியன்' சென்னை அணி, வார்னரின் டில்லியை எதிர்கொள்கிறது.

சென்னை அணியின் துவக்க வீரர்கள் கான்வே (458 ரன்), ருதுராஜ் (384) சீரான ரன் குவிக்கின்றனர். 'மிடில் ஆர்டரில்' ரகானே (245), ஷிவம் துபே (290 ரன், 9 இன்னிங்ஸ்) ஸ்கோரை உயர்த்த கைகொடுக்கின்றனர்.

சென்னை அணியின் பவுலிங் படையில் இளம் வீரர்கள் தேஷ்பாண்டே (19 விக்.,), 'ஜூனியர் மலிங்கா' பதிரானா (10) அசத்துகின்றனர். காயத்தில் இருந்து மீண்ட தீபக் சகாரும் (2) விக்கெட் வேட்டையை துவங்கி இருப்பது பலம்.

சுழலில் 15 விக்கெட் சாய்த்த ஜடேஜாவுக்கு, தீக்சனா (7) கைகொடுக்கிறார். இவர்களுடன் மொயீன் அலியும் (9), உதவுகிறார்.

டில்லி அணி 10 போட்டியில் 4ல் மட்டும் வென்று, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அனுபவ கேப்டன் வார்னர் (330 ரன்) வெற்றிக்கு திட்டமிடலாம். பேட்டிங்கில் அக்சர் படேல் (246), பில் சால்ட் (151) தவிர மற்ற வீரர்கள் வாய்ப்புகளை வீணடிக்கின்றனர்.

பந்துவீச்சில் மிட்சல் மார்ஷ் மட்டும் 9 விக்கெட் சாய்த்துள்ளார். குல்தீப் யாதவ் (8), அக்சர் படேல் (7), நார்ட்ஜேவுடன் (7), 'சீனியர்' வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா (5ல் 6 விக்.,) நம்பிக்கை தருகிறார்.