50 ஓவரில் 506 ரன்கள் குவித்த தமிழக அணி: ஜெகதீசன் 277 ரன் எடுத்து உலக சாதனை

இந்தியாவின் 'லிஸ்ட் ஏ', விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. பெங்களூரில் நடந்த போட்டியில் தமிழகம், அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதின.

தமிழக அணிக்கு நாராயணன் ஜெகதீசன், சாய் சுதர்சன் நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் அருணாச்சல் அணியின் பந்துவீச்சை விளாசினர்.

அதிரடி காட்டிய தமிழக வீரர் ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

தமிழக அணி 50 ஓவர்கள் முடிவில், 2 விக்., இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. தொடரில், ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் இது. 2வது இடத்தில் பெங்கால் அணியின் 426 ரன்கள் உள்ளது.

சமீபத்தில் சென்னை ஐ.பி.எல் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெகதீசன், இதில் அதிரடியாக விளையாடி முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

தொடர்ந்து, இரண்டாவதாக பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இமாலய சாதனை படைத்துள்ளது.