சென்னை அணி'ஹாட்ரிக்' வெற்றி
கோல்கட்டாவுக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் ரகானேவின் 'மேஜிக்' ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 49 ரன் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின.
சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி கலக்கல் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது சுயாஷ் சர்மா பந்தில் ருதுராஜ் (35) போல்டானார்.
பின் இணைந்து அபாரமாக ஆடிய ரகானே, உமேஷ் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். ரசல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே, தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.
சென்னை அணி 20 ஓவரில் 235 ரன் எடுத்தது. ரகானே (71), கேப்டன் தோனி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (0), நாராயண் ஜெகதீசன் (1) ஏமாற்றினர். வெங்கடேஷ் ஐயர் (20), கேப்டன் நிதிஷ் ராணா (27) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
மொயீன் அலி பந்தில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய ஜேசன் ராய், பதிரானா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 19 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 61 ரன்னில் (26 பந்து, 5 சிக்சர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
பொறுப்பாக ஆடிய ரிங்கு சிங், பதிரானா பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
கோல்கட்டாவுக்கு எதிராக 235 ரன் குவித்த சென்னை அணி, தனது 3வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.